இலங்கையின் முகத்தில் அறைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள இந்தியா
இலங்கை அரசுடன் சுமுகமான உறவைக் கொண்டிராத இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுக்கு, இந்தியா மத்திய அரசு ஆறுமாத சேவை நீடிப்பை வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
இந்தியாவின் இந்த அறிவிப்பு, அசோக் கே காந்தாவை அடுத்து பதவியேற்கும் புதிய தூதுவர் மூலம், உறவுகளை கட்டியெழுப்பத் திட்டமிட்டிருந்த இலங்கையின் முகத்தில் இராஜதந்திர ரீதியாக கொடுக்கப்பட்ட அறை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடையவிருந்தது.
இதனால் சற்று நிம்மதியடைந்த இலங்கை அரசு புதிதாக வரும் தூதுவர் மூலம் சுமுகமான உறவைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்பில் இருந்தது.
ஆனால், இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில், அசோக் கே காந்தாவின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு இந்தியா நீடித்துள்ளது.
அசோக் கே காந்தாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சுமுகமான உறவை விடவும் குறைந்த மட்டத்திலான உறவுகளே காணப்படுகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, கடைசியாக கொழும்பு வந்த போது, அதிகாரபூர்வமற்ற வகையில், அசோக் கே காந்தா குறித்து இலங்கை செய்த முறைப்பாடு அவருடனான உறவுகளை சீரழித்து விட்டது.
இலங்கை தொடர்பாக அசோக் கே காந்தா விரும்பத்தகாத அறிக்கைகளை இந்தியாவுக்கு அனுப்பி வருகிறார் என்று இலங்கை நம்புவதே, இந்த முறிவுக்குக் காரணமாகும்.
அசோக் கே காந்தாவுக்கு சேவை நீடிப்பு அளிக்கப்பட்டதால், புதிய தூதுவர் மூலம் உறவுகளைக் கட்டியெழுப்பலாம் என்ற இலங்கையின் எதிர்பார்ப்பு நொருங்கிப் போய் விட்டது.
இது நன்றாக கணித்து இலங்கையின் முகத்தின் கொடுக்கப்பட்ட இராஜதந்திர அறை என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முகத்தில் அறைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ள இந்தியா
Reviewed by கவாஸ்கர்
on
16:55:00
Rating: 5