கடந்த 27 நாட்களாக உணவு உண்ணாமலும், 13 நாட்களாக தண்ணீர் அருந்தாமலும் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறப்போராட்டம் நடத்திய ஈழத் தமிழ் இளைஞர் செந்தூரன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட சூழலில் அரசு அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று உண்ணாநிலை அறப்போராட்டத்தை நிறுத்திக் கொண்டார்.
தமிழக அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் கருதியதும் இப்போராட்டத்தை நிறுத்துவதற்கான காரணம் ஆகும். ஆனால், சிறப்பு முகாம்கள் எனப்படும் மனவதை முகாம்களில் துயர்படும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்து திறந்தவெளி முகாம்களுக்குத் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டுமென்ற செந்தூரனின் போராட்டக் கோரிக்கை நியாயமானதும், ஏற்கத் தக்கதும் ஆகும்.
எனவே, மனிதநேய உணர்வுடன், மனிதாபிமானத்துடன் ஈழத் தமிழ் அகதிகளைச் சிறப்பு முகாம்களிலிருந்து திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வது என்றும், 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் நடைபெறாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
01.09.2012 மறுமலர்ச்சி தி.மு.க