மூன்றாவது நாட்டை குறிவைப்பதற்காக தெற்காசியாவில் காலூன்றவில்லை – சீனப் பாதுகாப்பு அமைச்சர்
எந்தவொரு மூன்றாவது நாட்டையும் குறிவைப்பதற்காக தெற்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்தவில்லை என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் சேவைகள் அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரியில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை படைஅதிகாரிகள் மத்தியில் சீனப்பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் குவாங்லி,“சீனாவின் அமைதியான அபிவிருத்தி மற்றும் அதன் தேசிய பாதுகாப்பு கொள்கை” என்ற தலைப்பில் உரையாற்றினர்.
“பிராந்திய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றை பேணுவதற்காகவே சீன இராணுவம் தெற்காசிய நாடுகளின் படைகளுடன் ஒத்துழைப்பை நாடுகிறது.
சீனாவுடன் 14 நாடுகள் எல்லையை கொண்டுள்ளன. இவற்றில் ஐந்து நாடுகள் தெற்காசியாவிலுள்ளன.
இந்து சமுத்திரம் சீனாவின் முக்கியமான வலு மற்றும் பொருள் போக்குவரத்து பாதையாக உள்ளது.
இதனால், தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு உத்திகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சீனாவின் தேசிய பாதுகாப்புக் கொள்கை.
பண்டைய சீனாவுடன் இலங்கை நட்புறவைக் கொண்டிருந்துள்ளது.
பண்டைய சீனாவில் இலங்கை ‘சிங்கஅரசு‘ என்றே அறியப்பட்டிருந்தது. இந்து சமுத்திரத்தில் இது ஒரு முத்து.
சீனாவை முதலில் அங்கீகரித்த ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கை உடன் நாம் எப்போதும் நல்லுறவைக் கொண்டுள்ளோம்.
சீனாவின் பலமும் அனைத்துலக செல்வாக்கும் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினர் சீனா, ஆக்கிரமிப்பு பாதையில் செல்லும் என்று சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் சீன அச்சுறுத்தல் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர்.
சீனாவின் பாதுகாப்புச் செலவினம் வேகமாக அதிகரிப்பதாக ஊடகங்கள் சில சொல்கின்றன.
ஆனால், சீனாவின் பாதுகாப்பு செலவினம் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளது.
2010இல் சீனாவின் மொத்த தேசிய உற்பத்தியில் 1.4 வீதமாக இருந்த பாதுகாப்புச் செலவினம் 2011இல் 1.28 வீதமாக குறைந்துள்ளது.
சீனாவின் நியாயமான பாதுகாப்பு ஏற்பாடுகளை இராணுவ அச்சுறுத்தலாக சிலர் கூறுகின்றனர்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
மூன்றாவது நாட்டை குறிவைப்பதற்காக தெற்காசியாவில் காலூன்றவில்லை – சீனப் பாதுகாப்பு அமைச்சர்
Reviewed by கவாஸ்கர்
on
17:27:00
Rating: 5