Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சூடானுடன் பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்துகிறது இலங்கை – கோத்தாபயவின் பயணத்தில் இணக்கம்


சூடானுடன் பாதுகாப்பு விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளது.

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சூடானுக்கு மேற்கொண்டிருந்த ஐந்து நாள் பயணத்தின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த 26ம் நாள் சூடானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுடன் இலங்கை இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சூடான் சென்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் சூடானின் முக்கிய இராணுவ பயிற்சி நிலையங்களுக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்றதுடன், பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரகீம் முகமட் ஹுசேன், பாதுகாப்புச் செயலர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் முகமட் சய்ன், இராணுவப் பிரதித் தலைமை அதிகாரி ஜெனரல் இமாட் அடவி, கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் இஸ்மட் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலருடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

கார்ட்டூம் பாதுகாப்புக் கல்லூரியில், ‘தீவிரவாதத்தைத் தோற்கடித்த மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றில் இலங்கையின் அனுபவங்கள்‘ என்ற தலைப்பில் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.

இந்தப் பயணத்தின் முடிவில் இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையில் பயிற்சித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்த புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post