சீன படைஅதிகாரிகள் இலங்கை சென்றுள்ள அதேவேளை இந்திய – இலங்கை படை அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் கொழும்பில் நேற்று தொடங்கியுள்ளது.
இலங்கை படைத் லைமையகத்தில் நேற்று ஆரம்பமான இந்த உயர்மட்ட பேச்சுக்களில் பங்கேற்க இந்திய படையின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான மேலதிகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் குர்தீப் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழு கலந்துகொண்டுள்ளது.
இரு நாடுகளின் படை உயர் அதிகாரிகளுக்கு இடையிலான உறவுகள் ஒத்துழைப்புகள் குறித்து ஆராயப்படும் இந்தப் பேச்சுக்களின் முதலாவது கட்டம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் புதுடெல்லியில் நடைபெற்றிருந்தது.
கொழும்பில் நேற்று ஆரம்பமான இந்தப் பேச்சுக்களில் இந்திய படையின் சார்பில் அனைத்துலக ஒத்துழைப்புக்கான மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் குர்தீப் சிங் இந்தியபடையின் நடவடிக்கை பிரதிப் பணிப்பாளர் பிரிகேடியர் ஹர்ச குப்தா இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரிவின் பணிப்பாளர் கேணல் கஜன் தீப் இந்திய படை பயிற்சி பணிப்பாளர் கேணல் விவேக் தியாகி ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கை படையின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக தலைமையில் படைபிரிவுகளின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் இலங்கை தரப்பில் பங்கேற்கின்றனர்.
பயிற்சி புனர்வாழ்வு திட்டமிடல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவாக்கிக் கொள்வது குறித்து இந்த மூன்று நாள் பேச்சுக்களில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.