Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அரசு குழந்தைகள் காப்பகத்தில் நவீன சலவை இயந்தரங்கள் வழங்கப்படும்



சென்னை, ஆக.31 - தமிழகத்தில் 27 குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் 7 சேவை இல்லங்களில் தங்கிப் படிக்கும் ஏழைக் குழந்தைகள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்தும் விதத்தில் அவர்களின் துணிகளைத் துவைக்க 34 சலவை இயந்திரங்கள் வழங்க ரூ.1.20 கோடி நிதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, சிறப்பான கல்வியை அனைத்துத் தரப்பு மக்களும் எந்தவித இடையூறும் இன்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில், கல்வி கற்க ஊக்கத் தொகை, சத்துணவு, விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், மிதிவண்டி, மடிக்கணிணி ஆகியவை  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதலைமையிலான அரசால்  வழங்கப்பட்டு வருகின்றன.

சமூக நல இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும்  27 அரசு குழந்தை காப்பகங்கள் மற்றும் 7 சேவை இல்லங்கள் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழைக் குழந்தைகள் மற்றும்  ஆதரவற்ற விதவைகளுக்கு  உணவு, உறைவிடம், சீருடைகள் மற்றும் கல்வி வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகள் தங்கள் துணிகளை தாங்களே துவைத்துக் கொள்வதால், அவர்கள் பயிலும் நேரம் வீணாகிறது.

எனவே, இந்த இல்லங்களில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் பணிச் சுமையினை குறைக்கும் வகையிலும், துணி துவைக்கும் நேரத்தினை கல்விக்காகவும், ஓய்விற்காகவும் செலவிட ஏதுவாகவும்,    தமிழ்நாட்டில்   உள்ள 27 அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் 7 அரசு சேவை இல்லங்களுக்கும்  தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தக்கூடிய தரம் வாய்ந்த  34 சலவை இயந்திரங்களை தலா 3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் வாங்கி வழங்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதற்கென 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் மூலம்,  அரசு காப்பகங்களில் உள்ள குழந்தைகள், தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில், தங்களது கல்வியில் தனிக்கவனம் செலுத்தி நன்முறையில் தேர்ச்சி பெற வழிவகை ஏற்படும். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post