இந்தியப் பாதுகாப்பு இணை அமைச்சரின் கருத்து - தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு
இலங்கை, நட்புநாடாக இருப்பதால், அதன் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு இணை அமைச்சர் பல்லம் ராஜு வெளியிட்ட கருத்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இலங்கை படை அதிகாரிகள் இருவரையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தின.
இந்தநிலையிலேயே, நேற்று முன்தினம் இந்தியப் பாதுகாப்பு இணைஅமைச்சர் பல்லம் ராஜு இலங்கை படையினருக்கு தொடர்ந்து பயற்சி அளிப்போம் என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லம் ராஜுவின் கருத்து அதிர்ச்சி அளிப்பதாகவும், உடனடியாக இலங்கைப் படையழனரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தமிழநாடு முதல்வர் ஜெயலலிதா நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அத்துடன் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பல்லம் ராஜுவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டினதும் தமிழ் மக்களினதும் உணர்வுகளை மத்திய அரசு மதிக்காமல் கேவலப்படுத்துவதாக அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், இலங்கை படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பல்லம் ராஜுவின் கருத்துதைக் கண்டித்து வரும் சனிக்கிழமை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு இணை அமைச்சரின் கருத்து - தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கொந்தளிப்பு
Reviewed by கவாஸ்கர்
on
10:43:00
Rating: 5