Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிரானைட் மோசடி: உடந்தை அதிகாரிகள் மேல் பாய்கிறது புலனாய்வுப் பிரிவின் விசாரணை!


கிரானைட் குவாரி மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சிறப்பு லஞ்ச ஒழிப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மதுரையில் விசாரணையை துவக்கியுள்ளனர். கிரானைட் குவாரி மோசடியை கடந்த 20 ஆண்டுகளாக கனிமவளத்துறை, தொழில் துறை, தொல்லியல்துறை, வருவாய்த்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. குவாரி அதிபர்களிடம் அதிகாரிகளும், அரசியல் மட்டத்திலும் பணம் பெற்றதால், இதுவரை மோசடி வெளிவரவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கிரானைட் குவாரி மோசடி விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

அதே நேரத்தில் மோசடிக்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் மீது இதுவரை பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாமின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதல் தொடர்பாக 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, மோசடியில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமை செயலாளர் திபேந்திரா நாத் சாரங்கிக்கு கடிதம் அனுப்பினார். இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு தலைமை செயலர் உத்தரவிட்டார். இதன்படி, லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் எஸ்பி சண்முகப்ரியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிரானைட் மோசடியில் நடந்துள்ள அனைத்து விபரங்களையும் கலெக்டரிடம் பெற்றுச்சென்றுள்ளனர். இந்த சிறப்பு புலனாய்வு பிரிவு கடந்த 20 ஆண்டுகளில் குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கின்றனர். 

இதில் சிக்கும் அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் அதை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மதுரையில் பணியாற்றிய கலெக்டர்கள், டாமின் இயக்குநர்கள், உதவி இயக்குநர், தொழில் துறை உயர் அதிகாரிகள், தொழில்துறையில் பணியாற்றிய பல ஐஏஎஸ் அதிகாரிகள் இதில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை நேரடியாக விசாரிக்க தகுதியுள்ள கூடுதல் எஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பல உயர் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். ஏற்கனவே கிரானைட் மோசடி குறித்து அமலாக்க பிரிவு தனியாக விசாரணை நடத்தி போலீஸ் மூலம் ஆவணத்தை பெற்று சென்றுள்ளனர். வருமான வரித்துறையும், சுங்கம் மற்றும் கலால் வரித்துறையும் தனியாக விசாரித்து ஆதாரத்தை திரட்டி வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post