மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை கேலிச்சித்திரம் வரைந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று மரபணு விஞ்ஞானி ஒருவர், குடிசைகள் அகற்றியதை கண்டித்து பேரணி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பிரதமரிடம் முறையிட உள்ளனர். மேற்கு வங்கத்தில் சமூக ஆர்வலர்கள் உள்ளி்ட்டோர் மீது அம்மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் பல்வேறு அமைப்புகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி கேலிச் சித்திரம் வரைந்து, இணையதளத்தில் வெளியிட்டதாக, ஜாதவ்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில், நேற்று கோல்கட்டாவின் கிழக்கு பகுதியில் நானாதங்கா பகுதியில் ஏழைகள் வசிக்கும் குடிசைப்பகுதிகளை அகற்ற அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோல்கட்டாவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தின், பிரபல மரபணு உயிரியல் விஞ்ஞானி பர்தோ சரோதி ராய் என்பவர், அரசுக்கு எதிராக மக்களை திரட்டி பேரணி நடத்தினார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கொந்தளித்துள்ளனர். மம்தாவின் ஆராஜக போக்கினை பல்வேறு விஞ்ஞானிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும், இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு மம்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே தன்னைபற்றி ஏதேனும் சமூ வலைதளங்களில் விமர்சித்து செய்திக் கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள் வெளியிடப்படுகின்றனவா என கண்காணிக்க மம்தா பானர்ஜி குழு ஒன்றினை நியமித்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட இக்குழுவினர் சில சமூக வலைதளங்களை தீவிர கண்காணித்து அவ்வப்போது தலைமைச் செயலகத்திற்கு தெரிவித்து வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.