Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஷாருக்கானை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய விவகாரம் இனப்பாகுபாடு இல்லை அமெரிக்கா விளக்கம்

நியார்க் விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய விவகாரத்தை இனப்பாகுபாடு காட்டியதாக கருதக்கூடாது என்று அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது.

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற நடிகர் ஷாருக்கானை நிïயார்க் விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் யேல் பல்கலைக்கழக அதிகாரிகள் வாஷிங்டனில் உள்ள உள்துறை அமைச்சகம், சுங்கத்துறை, குடியுரிமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஷாருக்கான் அவமதிக்கப்பட்டதாக கூறி இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் டெல்லியில் உள்ள அமெரிக்க தலைமை துணைத்தூதர் டொனால்டு லூவை வெளியுறவுத்துறை நேரில் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.

ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்கா சென்ற நடிகர் ஷாருக்கான் அங்குள்ள நெவார்க் விமான நிலையத்தில் இதுபோல் தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்த சம்பவங்கள் குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:-

விமான நிலையத்தில் நடிகர் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தப்பட்டதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் இனப்பாகுபாடோ அல்லது வேறுவிதமான பாகுபாடோ காட்டப்படவில்லை. அவரைப் போன்றவர்கள் முன்கூட்டியே தங்களுடைய அந்தஸ்து, பயண திட்டம் போன்ற விவரங்களை டெல்லியில் உள்ள எங்கள் தூதரகத்தில் தெரிவித்து விட்டு வந்தால் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த ஷாருக்கான் விமான நிலையத்தில் இருந்து வெளிவருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டு உள்ளது. சினிமா கலைஞரும், மனிதாபிமானியுமான ஷாருக்கான் மீது நாங்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கிறோம். விமான நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்துக்காக நான் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்காவுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிரமம் இன்றி வந்து செல்கிறார்கள். அவர்களையெல்லாம் பிடித்துவைத்து தாமதப்படுத்துவது இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு மார்க் டோனர் கூறினார்.

அமெரிக்க சுங்கதுறை மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமெரிக்கா எல்லோரையும் வரவேற்கும் தேசமாக எப்போதும் விளங்குகிறது. அமெரிக்காவுக்கு வருபவர்கள் சிரமம் இன்றி வந்து செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதே சமயம் அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களுக்கும் தீவிரவாதிகள், ஆயுதங்கள் போன்றவற்றாலும் கடத்தல்காரர்களாலும் ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

எங்கள் மக்களை மட்டும் இன்றி கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வெளிநாட்டினரை பாதுகாக்கும் கடமையும் எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post