முதல்வர் ஜெயலலிதாவே கைது செய்யச் சொல்லியும் என்னை போலீசார் கைது செய்யவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுரையில் மேலமாசி வீதி- தெற்கு மாசி வீதி சந்திப்பில், மின்சாரம், பால் விலை, பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை இருந்தது.
அதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்தான் ஜெயலலிதா. ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு 37 சதவீதம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். இதனால், மற்ற பொருள்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்துவிட்டார். இது தொடர்பாக, சட்டப்பேரவையில் பேச விடவில்லை. அதனால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்.
2001-2006ல் ஜெயலலிதா ஆட்சி செய்தபோது, மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. இதற்கு, 1996-2001ம் ஆண்டு திமுக ஆட்சி செய்தபோது ஏற்படுத்தி வைத்திருந்த மின் திட்டங்களே காரணம்.
அதேபோல், கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது ஏற்படுத்தி வைத்திருந்த மின்திட்டங்கள் காரணமாக, இன்னும் 2 ஆண்டுகளில் மின்பற்றாக்குறை தீரும்.
இது தெரியாமல் ஒரு அமைச்சர், திமுக மின்சாரம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் தீட்டாததால், அதிமுக ஆட்சியில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறி, எனக்கு அவர் சவால் விடுத்திருக்கிறார். நான் அவரது சவாலை ஏற்கிறேன்.
அவருடன் ஒரே மேடையில் இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.
இன்றைக்கு திமுகவில் தீவிரமாகப் பணியாற்றுபவர்களை, நிலப்பறிப்பு வழக்குகளில் கைது செய்து ஒழிக்கப் பார்க்கின்றனர்.
நான் எதற்கும் அஞ்சாதவன். என் மீது வழக்கு போட்டு ஜெயலலிதாவே கைது செய்யச் சொல்லியும் என்னை போலீசார் கைது செய்யவில்லை.
மிசா சட்டத்தை எதிர்த்து 1975ம் ஆண்டு சிறைக்குச் சென்றவன். அந்த சம்பவத்தில் என்னை காப்பாற்றியது அண்ணன் சிட்டிபாபு. 100 நாள் சிறைவாசம் அனுபவித்தேன். சிறையில் எனக்கு கிடைக்காத தாய்ப்பாசம், தந்தைபாசம், சகோதர பாசம் மூன்றையும் கொடுத்தவர் அண்ணன் சிட்டிபாபு என்றார் ஸ்டாலின்.