மக்களுக்கு எதிரான ஆட்சியைத்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதல் நடத்தி வருகிறார் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளி வந்த பின்னர் முதல் முறையாக நேற்று சென்னை அருகே திருவொற்றியூரில் நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் கனிமொழி.
அவர் பேசுகையில் அதிமுக அரசைக் கடுமையாக சாடிப் பேசினார். கனிமொழி தனது பேச்சின்போது,
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓராண்டில் மின் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுதும் 50 சதவீத மின்வெட்டு அமலில் உள்ளது.
திமுக ஆட்சியில் சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
1996-2001 தி.மு.க ஆட்சியில் 2,500 மெகாவாட், 2006-11 ஆட்சியில் 4,900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க புதிய திட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தார். இதன் பயனை அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தனது சாதனையாகப் பறைசாற்றிக் கொண்டார்.
2003-லேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரித்த ஜெயலலிதா கடந்த 6 மாதங்களாக அதனை எதிர்த்து வந்தார். சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்குப் பிறகு உடனே இத்திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார்.
ஒரு இடைத் தேர்தலுக்காக மாபெரும் திட்டத்தையே முடக்கிப் போட்டது சரியா?
ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சாமானிய மக்களுக்கு எதிரான ஆட்சியை மட்டுமே ஜெயலலிதா நடத்திவருகிறார். பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 2 உயர்த்திக் கொடுத்துவிட்டு பொதுமக்களுக்கு ரூ.14 விலை உயர்த்தினார்.
சமீபத்தில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விதித்ததன் மூலம் ரூ. 1,800 கோடி புதிய வரிச்சுமையைச் சுமத்தியுள்ளார்.
மதிப்புக் கூட்டு வரியால் அரிசி மூட்டை ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. ஆனால் தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தாத கோதுமை, ஓட்ஸ் போன்ற பொருள்களுக்கு வரி குறைத்துள்ளார்.
புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம், துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் மேம்பாலம், சமச்சீர் கல்வி, செம்மொழிப் பூங்கா, தமிழாராய்ச்சி நிறுவனம் என தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் புறக்கணிப்பதில் ஜெயலலிதா அடம்பிடிக்கிறார்.
மக்கள் நலப் பணியாளர்கள் விஷயத்தில் மனிதாபிமானமின்றி நடந்து கொள்கிறார் என்று பேசினார்.