இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று ராஜபக்சேவுடனான காலை விருந்து நிகழ்ச்சியை மத்திய வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது. இதையடுத்து ராஜபக்சேவுடன் உட்கார்ந்து சாப்பிடும் அபாயத்திலிருந்து இந்திய எம்.பிக்கள் தப்பியுள்ளனர்.
இந்திய எம்.பிக்கள் குழு நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி வி்மானம் மூலம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது. இக்குழுவின் தலைவராக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளர்.
முன்னதாக இக்குழுவினரிடம் பயணத் திட்டம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கிப் பேசினார். அப்போது ராஜபக்சேவுடன் 21ம் தேதி காலை விருந்து சாப்பிடுவதாக உள்ள திட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். இதை தாங்கள் விரும்பவில்லை என்றும் ரத்து செய்து விடுமாறும் அவர்கள் கோரினர். சுஷ்மா சுவராஜும் கூட இதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தற்போது அந்த விருந்து நிகழ்ச்சியை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. அதன்படி 21ம் தேதிக்குப் பதில் 20ம் தேதி மாலையே ராஜபக்சேவை இந்திய எம்.பிக்கள் குழு சந்தித்துப் பேசுகிறது. ஆனால் எதுவும் சாப்பிட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பயணத் திட்டத்துடன் இன்று முதல் 6 நாட்களுக்கு தங்களது இலங்கை பயணத்தை ஆரம்பிக்கின்றனர் இந்திய எம்.பிக்கள்.