தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுவருகிறது.
இதற்காக 40 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி பள்ளிகள், பேருந்து நிலையங்கள் பொது இடங்களில் பலவற்றிலும் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முகாம்கள் மூலம் சென்னையில் 5.2 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், தமிழகம் முழுவதும் 70 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து கொடுக்கப்படவருக்கிறது.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.
இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயற்பட்டு வருகிறது. முகாமில் சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளான ரோட்டரி, இந்திய மருத்துவக் கழகம், இந்திய குழந்தைகள் கழகம், அரிமா சங்கம் ஆகியவையும் ஈடுபடுகின்றன. மேலும் 2 லட்சம் பணியாளர்கள் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
கடந்த பெப்ரவரி 19ம் திகதி முதல் கட்டமாக தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 70 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக போலியோ நோய் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக போலியோவினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் நாட்டின் வேறு பகுதிகள் மற்றும் வேற்று நாடுகளிலிருந்து போலியோ வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதால், இங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ முகாம் நாளன்று சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியம் எனவும், அனைத்து பெற்றோர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.