வேலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
அமைச்சர் விஜய் நேற்று வேலூர் சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டதுடன், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அமைச்சர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டையும், பன்றிக்காய்ச்சல் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டையும் பார்வையிட்டார். அத்துடன் அந்த ஆஸ்பத்திரியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவையும் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. சந்தேகப்பட்ட 2 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்ததில் அவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் இங்குள்ள டாக்டர்கள், நர்சுகள், மற்றும் ஊழியர்களுக்கு முன் எச்சரிக்கையாக பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் 2 மருத்துவமனைகளிலும், மதுரை, கோவை, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கூடங்கள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் `டயாலசிஸ்' வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.
நிகழ்ச்சியில் கலையரசு எம்.எல்.ஏ., டீன் ரவிசங்கர், குடியிருப்பு மருத்துவ அதிகாரி அருணன், ஒன்றியக்குழு தலைவர் ராகவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி வேலூர் டவுனில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு நேற்று அமைச்சர் விஜய், மேயர் கார்த்தியாயினி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் துணை மேயர் தருமலிங்கம், மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.