கர்நாடகத்துக்கு தண்ணீர் தருவது பாம்புக்கு உணவு தருவது மாதிரி, அது சாப்பாடு போட்டவரையே கடிக்கும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களுக்கு நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மகாராஷ்டிரம் தனது தூத் கங்கா மற்றும் வர்ணா ஆறுகளில் இருந்து கர்நாடகத்தின் வறட்சி பாதித்த வட மாவட்டங்களுக்கு 2 டிஎம்சி நீரைத் தர ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்குப் பதிலாக கர்நாடகம் தனது அல்மத்தி அணையிலிருந்து மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்துக்கு தண்ணீர் தரவுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் பால் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில்,
கர்நாடகத்தில் வசிக்கும் மராத்தி பேசும் மக்களுக்கு எதிராக அங்கு வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மராத்திய மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக பெல்காம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மராத்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்த மக்களை இரண்டாம் தர குடிமக்கள் போல கர்நாடகம் நடத்துகிறது.
ஆனால் இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு அந்த மாநிலத்துக்கு தண்ணீர் அளிக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது. பாம்புக்கு உணவு ஊட்டிவிடுவதற்கான ஒப்பந்தத்தை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டுள்ளது. இதை கடுமையாகக் கண்டிக்கிறேன்.
கர்நாடக மாநிலத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால் அது கர்நாடகத்தில் வசிக்கும் மராத்தி மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்று கூறியுள்ளார்.