அமெரிக்காவில் இது முதல் முறை அல்ல. பள்ளிகளில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது . இருந்தும் அமெரிக்க அரசு துப்பாக்கி பயன்படுத்தும் விதியை இன்னும் கடினமாக்கவில்லை என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். இப்போது நடத்துள்ள துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவையே நிலை குலைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வராத போதிலும் 27 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பள்ளிக்கூட அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.