கர்நாடக
அரசின் வஞ்சகமான போக்கால், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் உள்ள
விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டின் அடிப்படை
ஆதிபத்திய உரிமையான காவிரி நீரை, கர்நாடக மாநில அரசு அக்கிரமமான முறையில்
தடுத்து வருவதால், விவசாயிகள் குறுவை, சம்பா விவசாயத்தை இழந்து மீள முடியாத
நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
காவிரி நடுவர்
மன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்க
கர்நாடகம் மறுப்பதாலும், போதிய அளவு மழை இல்லாததாலும் ஆண்டுதோறும் ஜூன் 12
ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம்
தேதிதான் திறக்கப்பட்டது. இதனால் குறுவைப் பயிர் சாகுபடி முற்றாக
பாதிக்கப்பட்டுவிட்டது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக
குறைந்து போனதால் 12 இலட்சம் ஏக்கர் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியாமல்
விவசாயிகள் இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். கடன் மேல் கடன்பட்டு,
பயிர்த்தொழில் செய்த விவசாயிகள், வழி தெரியாமல் கை பிசைந்து நிற்பது
மட்டுமன்றி, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட செய்தி நம்
நெஞ்சைப் பிளக்கிறது.
நாகை மாவட்டம், கீழ்வேளூர்
ஒன்றியத்தைச் சேர்ந்த, கூரத்தான்குடி ராஜாங்கம் பூச்சிக்கொல்லி மருந்தைக்
குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி தரத்தக்கத் தகவல்
மறைவதற்குள், மயிலாடுதுறை முருகையன், நடுவேட்டியம் ராஜகோபால் ஆகிய இரு
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். எனும் செய்தி நம்மைப் பேரிடியாகத்
தாக்குகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை விவசாயிகளுக்கா இந்த நிலை?
‘சோழ நாடு சோறுடைத்து’ எனப் புகழ்பெற்ற சோழ மண்டலம் இப்படியா துயர்
சூழ்ந்து நிற்பது?
விவசாயிகளின் துயரத்திற்கும்,
தற்கொலைக்கும் பொறுப்பு ஏற்கப்போவது யார்? நடுவர் மன்றத் தீர்ப்பின்படி,
தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய 52.5 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகம்
வழங்கிட உத்தரவிட வேண்டுமென காவிரி கண்காணிப்பு ஆணையக் கூட்டத்தில், தமிழக
அரசின் சார்பில் வற்புறுத்தப்பட்டது. கர்நாடக மாநில அரசு பொய்யான
காரணங்களைக் காட்டி, தண்ணீர் வழங்க முடியாது என அடம்பிடித்தது. இரு
மாநிலங்களின் நிலைமையை உணர்ந்து, கர்நாடகம், தமிழ்நாட்டிற்கு நவம்பர் 15
முதல் 30 ஆம் nதி வரை 4.8.டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென
காவிரி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டது.
அதையும் வழங்க முடியாது என்று
கர்நாடகம் கூறியபோது, பிரதமர் தலைமையிலான கண்காணிப்பு ஆணையம் உரிய
நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தமிழக அரசின் சார்பில், உச்சநீதிமன்றத்தை
நாடியபோது, இரு மாநில முதல்வர்களும் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு
குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தது. இதன்படி தமிழக முதல்வர்
நவம்பர் 29 ஆம் தேதி பெங்களூரு சென்று, கர்நாடக முதல்வரைச் சந்தித்து,
சம்பா பயிரைக் காப்பாற்ற 30 டி.எம்.சி. காவிரி நீர் தரவேண்டும் என்று
கோரினார். ஆனால், ஒரு சொட்டு நீரும் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர்
ஜெகதீஷ் ஷெட்டர் கை விரித்துவிட்டார். காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா
பயிர் காய்ந்து கருகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்,
கர்நாடக மாநில அரசைப் பணிய வைத்து, தமிழ்நாட்டின் விவசாயிகளின் உரிமையைக்
காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, தமிழகத்துக்குத் துரோகம் விளைவிக்கும்
போக்கிலேயே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு
உச்சநீதிமன்றத்துக்குச் சென்று முறையிட்டதால்தான் , உச்சநீதிமன்ற ஆணைப்படி
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் காவிரி கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டத்தைக்
கூட்ட பிரதமர் முன்வந்தார். ஆனால் காவிரி கண்காணிப்பு ஆணையம்,
உச்சநீதிமன்றம் போன்றவற்றின் உத்தரவை ஏற்காத கர்நாடக அரசை தட்டிக்கேட்க
வேண்டிய மத்திய அரசு, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது.
ஆகவே,
மத்திய அரசைக் கண்டித்து, தற்கொலை செய்துbhண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
வழங்கக்கோரியும், கருகும் சம்பாப் பியிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை
எடுக்க வலியுறுத்தியும், காவிரி பாசன பகுதிகளில் விவசாய சங்கங்கள் நடத்த
இருக்கும் அறப்போராட்டத்திற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
முழு ஆதரவை வழங்குகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
04.12.2012 மறுமலர்ச்சி தி.மு.க