இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி லண்டனில் உலகத்தமிழர் மாநாடு இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் வசிக்கும் தமிழர் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நாளை வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
பிரித்தானிய தமிழ் பேரவை மற்றும் பிரிட்டன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
போர்க்குற்றம் மட்டுமல்லாமல், இலங்கையில் தமிழர்கள் மீதான அடக்குமுறை பற்றியும், தமிழர் அடையாளங்கள் அழிக்கப்படுவது பற்றியும் சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்தப்படும் என்றும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனனர்.
மாநாட்டில் பேசிய திமுக பொருளாளர் முக ஸ்டாலின், இலங்கையில் ஐநா சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும்போது, இலங்கை அரசு அகதி முகாம்களை மூடிவிட்டதாக அறிவித்தாலும், ஏராளமானோர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று குற்றம்சாட்டினார்.