![]() |
முதுகலைப் படிப்பு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை! |
ஆந்திர மாநிலம் அதிலாபாத் மாவட்டம் குசலாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தாஷ்குமார்என்ற உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர், தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
\சந்தோஷ் குமார் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காலம் கடத்துவதால் தூக்கு போட்டு தற்கொலை செய்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு செகந்திராபாத்தில் தனி தெலுங்கானாவுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் நினைவு சின்னம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சந்தோஷ்குமாரின் உடலை அவரது தந்தை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார். இந்த நிலையில் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் நிலவியது. நேற்று இரவு ஐதராபாத் ராமாந்தயூர் பகுதியில் 2 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியல் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் கோதண்டராம் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் முழு அடைப்பு நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.