
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபிர் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது.
டெல்லி அரசு திரும்பக் கொடுத்த ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், தெற்கு பகுதிகளுக்கான மின் விநியோக சேவையை சரி செய்ய வேண்டும் என தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த மனுவை மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், டெல்லி அரசு திரும்ப ஒப்படைத்த மின்சாரத்தை வேறு மாநிலத்திற்கு வழங்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தனது வாதத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.