புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்ïனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இதனால் அந்த தொகுதிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 20 பேர் போட்டியிடுகிறார்கள். தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் மும்முரமாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.
நேற்று தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
பிரசாரம் முடிவடைந்ததை தொடர்ந்து, அமைச்சர்களும் கட்சி பிரமுகர்களும் மற்றும் தேர்தல் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினரும் நேற்று மாலை புதுக்கோட்டையை விட்டு வெளியேறினார்கள்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா புதுக்கோட்டை தொகுதியில் நேற்று முன்தினம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கிராமம், கிராமமாக சென்று தீவிர பிரசாரம் செய்தார். புதுப்பட்டி என்ற கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் 43 கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் செய்து 10 இடங்களில் பேசினார். மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் புதுக்கோட்டையில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர்.
ஆனந்தராஜ், ராமராஜன், செந்தில், தியாகு, குள்ளமணி உள்ளிட்ட நடிகர்களும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கினார்கள்.
தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் 4 நாட்கள் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் புதுக்கோட்டை தொகுதியில் 3 நாட்கள் முகாமிட்டு ஜாகீர் உசேனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களும் புதுக்கோட்டையில் தங்கி தேர்தல் வேலைகள் செய்தனர். தே.மு.தி.க.வை இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி ஆதரிப்பதால் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், வேட்பாளர் ஜாகீர் உசேனை ஆதரித்து பிரசார கூட்டங்களில் பேசினார்.
இறுதி கட்டமாக நேற்று பிற்பகல் 3 மணி அளவில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாலபாரதி எம்.எல்.ஏ., இந்திய தேசிய லீக் தலைவர் நாகூர் ராஜா ஆகியோர் பேசினார்கள்
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பச்சமுத்து, தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து புதுக்கோட்டை நகராட்சி பகுதி, புதுக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
இவர்கள் தவிர மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி வேட்பாளர் விஜயன், கட்சியின் கொள்கைகளை விளக்கி கிராம புறங்களை மையப்படுத்தி வீடு, வீடாக வாக்கு சேகரித்தார். மக்கள் மாநாடு கட்சி வேட்பாளர் அறிவழகன், விவசாய சங்க வேட்பாளர் செங்கோல் உள்பட சுயேச்சை வேட்பாளர்களும் வாக்கு சேகரித்து வந்தனர்.
தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். புதுக்கோட்டை தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 980 ஆகும். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 97ஆயிரத்து 370 பேர். பெண் வாக்காளர்கள் 97 ஆயிரத்து 604 பேர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிக பட்சமாக 16 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களைத்தான் பொருத்த முடியும்.
புதுக்கோட்டை தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 224 வாக்குச்சாவடிகளிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட இருக்கும் எழுது பொருட்கள் உள்பட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அவை அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கின்றன.
வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,095 ஊழியர்களுக்கு ஏற்கனவே 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. 37 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருப்பதால், அந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் நுண்பார்வையாளர்கள் எனப்படும் மத்திய அரசு ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் நியமிக்கப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை தொகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாது வாக்குப்பதிவு நடைபெறும். எல்லா வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்ட `லேப்டாப்'கள் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர வீடியோ மூலமும் வாக்குப்பதிவு காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட இருக்கிறது.
வாக்குப்பதிவையொட்டி புதுக்கோட்டை தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஓட்டு எண்ணிக்கை 15-ந் தேதி நடைபெறும்.