Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com
Showing posts with label தமிழர் பண்பாடு. Show all posts
Showing posts with label தமிழர் பண்பாடு. Show all posts

பறையர்களுக்கு இறையிலி நிலம் வழங்கியவர் இராஜராஜ சோழர் - கல்வெட்டு ஆய்வு



பறையர்களுக்கு இறையிலி நிலம் வழங்கியவர் இராசராசச் சோழர்! - ம.செந்தமிழன்

இராஜராஜச் சோழர் காலம் குறித்த எனது கட்டுரையின் ஒரு பகுதி இது.

2010 ஆம் ஆண்டு, ‘இராசராசச் சோழர் – ஓர் தமிழிய ஆய்வு’ எனும் சிறு நூலாக அக்கட்டுரையின் தொகுப்பு வெளியானது. பொதுவாகவே, பிற்காலச் சோழர் காலம் குறித்து இன்று விவாதிக்கப்பட்டு வரும் கருத்துகள், சில ஆய்வாளர்களின் நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக திரு.நீலகண்ட சாஸ்திரியின் நூல்தான் பிற்காலச் சோழர்கள் குறித்த இன்றைய பல கருத்துகளுக்கு ஆதாரமாக உள்ளது.
’பிற்காலச் சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு ஒரு பெரும் வாழ்வு இருந்தது’ என்ற கருத்தைப் பரப்பும் நோக்கத்தை திரு.நீலகண்ட சாஸ்திரியின் அணுகுமுறையில் காண முடிகிறது. தமிழகத்தில் பிராமணர்களுக்கென நீண்ட நெடிய வரலாறு இருப்பதாகவும், அந்த வரலாறும் மதிப்பும் மரியாதையும் மிக்க வரலாறுதான் என்பதாகவுமே, பிராமணிய சார்பு ஆய்வுகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளை அப்படியே பின்பற்றியதன் விளைவுகளில் ஒன்றாக, ’தமிழர்கள் வரலாறு பிராமணர்களுக்கு அடிமைப்பட்ட வரலாறுதான்’ என்ற நம்பிக்கை கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டது.

எனது கட்டுரைகள், மூலச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஏதேனும் ஓர் ஆய்வாளரது கருத்துகளைச் சான்றாகக் காட்டினாலும், அவரது ஆய்வுகள் மூலச் சான்றுகளின் அடிப்படையிலானவையா அல்லது அவரது ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவையா எனப் பிரித்தறிந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை இது.

மூலச் சான்றுகள் என்பவை, கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற வரலாற்றின் சமகாலச் சான்றுகள். 

அந்த வகையில் சில கல்வெட்டுச் சான்றுகளைக் கண்போம்.
“உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்
களிலும் உடையார் ஸ்ரீ இராஜராஜதேவர்
குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ
கோயில்களும் குளங்களும்ஊடறுத்துப்போன வாய்க்கால்களும்
பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ்
சுடுகாடும் உள்ளிட்டு
இறைஇலி நிலங்களும்...’
(இராஜராஜேச்சரம்,
முனைவர் குடவாயில்
பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)


தஞ்சைப்பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேற்கண்ட கல்வெட்டும் ஒன்று. இக் கல்வெட்டு கூறும் சேதி, ’இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாகக் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும் கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலஙகள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி மக்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை. 
அடுத்த கல்வெட்டு,

’சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்து கூறிட்டமையில்.....இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின...’

(சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153)

மேற்படி கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழு உரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது.’ இதன் மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது. 

களப்பிரர், பல்லவர் காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் பிராமணர்களுக்கு முற்றும் முழுதான உரிமை உடையனவாக வழங்கப் பட்டன. மேலும் அந்த நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அங்கே அரசனின் ஆணை செல்லாது. அந்நிலங்களுக்காக பிராமணர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை. இந்த நிலையை மாற்றியது சோழர் காலம்.
அடுத்த சான்றைக் காண்போம்.

“சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே. கோயில் மற்றும் பிராமணர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுகளில் பெரிதும் இருக்கின்றன. எனவே, கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்” (மேலது நூல் / பக் 214,215)
என்கிறார் ஆய்வாளர் மே.து.ரா. 
கொடை யளிக்கப்பட்ட மொத்த ஊர்கள் 1300ஐயும் கல்வெட்டுச் சாசனப்படி ஆய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு இது.

பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேலும் ஒன்றைக் காண்போம்.
“கேரளாந்தகன் திருவாயில் மெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர்” என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்தி நிற்கும் சேதி,
“தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்ற முறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்டது. இக் கல்வெட்டை ஆய்ந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பின் வருமாறு வியந்து உரைக்கிறார்;

“தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துகள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழ மண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்க முடியாது’ (இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

இராசராசச் சோழர் குறித்த முக்கியமான வெளிநாட்டவர் ஆய்வுகளை மேற்கோள் காட்டும் ஆய்வாளர் பாமயன், “களப்பிரர், பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராமண ஆதிக்கப் பிரமதேய முறையை மாற்றி அமைத்துத் தமிழ்க் குலத்தவருக்கு நிலங்கள் வழங்கவே, கோயில்களைப் பொருளியல் மையங்களாக மாற்றினார் இராசராசன்” என்கிறார். ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கராசிமா, சோழர் காலத்தில் பிராமணர்களின் தனியார் நிலங்களும் பிரமதேயங்களும் கோயில்களுக்கு மாற்றப்பட்டன என்று கூறியுள்ளதைப் பாமயன் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். (வேளாண்மையை விரித்த வேந்தன் / பாமயன் / தமிழினி, 2010 அக்டோபர்)

இது மிக முக்கியமான பார்வை ஆகும். தனியார் சொத்துகள் வரம்பு மீறும்போதும் ஊழல் மிகும்போதும் அச்சொத்துகளை அரசுடைமை ஆக்கும் வழக்கம் இன்று உள்ளது. இதே போல் பிராமணரின் தனியார் சொத்துகளையும் பிரமதேய சொத்து களையும் கோயிலுக்கு மாற்றி விடுவதும் அரசுடைமையின் அக்கால வடிவம்தான்.

அடுத்து, வேறு ஒரு கல்வெட்டைக் காண்போம். இதுவும் அதே தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுதான். ஆனால், விஜயநகர அரசர் காலக் கல்வெட்டு.

இக்கல்வெட்டு, மகா மண்டலேசுவரன் திருமலை ராயனுடையது.’தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பிரமதேய கிராமங்கள் சிலவற்றை வரி இல்லாத நிலங்களாக மாற்றி ஆணை பிறப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது’ ((இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

இதன் பொருள் என்ன? விஜயநகர அரசர்கள் தஞ்சையை ஆளும் வரை, பிராமதேய கிராமங்கள் வரி செலுத்த வேண்டிய வையாகவே இருந்தன என்பதுதானே! விஜய நகர, நாயக்கர் அரசுகள் பிராமண அடிவருடி அரசுகள் என்பதை ஏறத்தாழ எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வரசுகளே, பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின்னர் தமிழகத்தை ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்தன.

களப்பிரர்கள் பற்றியும் தமிழகத்தில் உண்மைக்கு மாறான கருத்து நிலவுகிறது. கள்ளப்பிரர் காலம் பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானது எனப் பல நம்புகின்றனர். ஆனால், மூலச் சான்றுகள் இந்த நம்பிக்க்கைக்கு மாறான தகவல்களை வைத்துக் கொண்டுள்ளன.

இதைப் பற்றிய களப்பிரர் காலக் கல்வெட்டு ஒன்றைக் காண்போம். பூலாங்குறிச்சி கல்வெட்டு என்று அதற்குப் பெயர். அக்கல்வெட்டுகளின் சிலவரிகளைக் காணலாம்;
.....(ழவரும்) ரு...ங் கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருப் பிரம்ம தாயக்கி
....(ழமை)யும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப் கடைய வயலென்னும்
....புலத்தவன் விற்றுக் கொடுத்த புன்செ நிலனு
....துப் பிரமதாயத்துப் பிரமதாயக் கிழவரா(ன)
....வரு குடிகளையும்...டையாரும் பிரம்மதாய முடையாருந் நாடு காப்பாரும் புறங்காப்

-இக்கல்வெட்டுகள் வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் ஆகிய பிரமதேய கிராமங்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. இந்த பிரமதேய நிலங்களைப் பெற்றுக் கொண்ட பிராமணர்களைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்,’பிரமதேய கிழார்கள்’ என்கின்றன.

சில குறிப்புகள்:

’சேரி’ என்பது, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்ற இன்றைய கருத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. ’சேரி’ என்றால், குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்ந்து வாழும் இடம் என்றுதான் பொருள். அந்தவகையில் ‘பறைச்சேரி, கம்மாளச் சேரி, பள்ளுச் சேரி’ மட்டுமல்ல, ‘பார்ப்பனச் சேரி’களும் சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் நிறையவே உண்டு. புகார்ப் பட்டிணத்தில் ‘யவனச் சேரி’கள் இருந்தன. ’யவனர்’ என்றால் கிரேக்கர்களைக் குறித்த சங்கத் தமிழ்ச் சொல். 

தஞ்சைப் பெருவுடையார் கோயில் சொத்துகளை பிராமணர்கள் அனுபவித்தனர் என்றும் பொத்தாம் பொதுவாகப் பேசப்பட்டு வருகிறது. பின்வரும் பட்டியல் பெருவுடையார் கோயிலின் ஆக்கம் மற்றும் நிர்வாகக் குழுவினரை வரிசைப்படுத்துகிறது.

1. மாமன்னன் இராசராசன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் எனும் ராசராசப் பெருந்தச்சன் எனும் தலைமைக் கட்டிடக் கலைஞர்.
3. மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
4. இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
5. மாமன்னனின் தமக்கை குந்தவைப் பிராட்டியார்.
6. சேனாதிபதி கிருஷ்ணன் இராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன்.
7. ஸ்ரீகாரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)
8. ஈசான சிவபண்டிதர் எனும் இராஜகுரு
9. இராசேந்திர சோழன்
10. சைவ ஆசாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)
11. கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்

ஆறாம் இடத்தில் குறிப்பிடப்படும் பிரம்மராயன் மட்டுமே, பிராமணர். கோயிலின் மதில் சுவரைக் கட்டுவிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கோயில் நிர்வாகத்தில் இவருக்கு எந்தப் பொறுப்பும் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. மேலும் இவர், இராசராசரின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர். 
பெருவுடையார் கோயில் நிர்வாகம் தமிழ்க் குலத்தவர்கள் நிர்வாகத்தில் மட்டுமே இருந்தது. பவனபிடாரன் என்பவர் சிவனிய அறிவாளராக இருந்திருக்க வேண்டும். பிடாரன் என்றால், தேவாரம் பாடுவோரைக் குறித்தது. இவரே பெருவுடையார் கோயிலின் தலைமை குருக்கள்.
’பிராமணர் ஆதிக்கத்தில் கோயில் இருந்தது, சமஸ்கிருத மந்திரங்கள்தான் ஓதப்பட்டன’ என்பது போன்ற கதைகளைக் கல்வெட்டுகள் மறுக்கின்றன. 

இராசராசச் சோழரின் அரச ஆலோசகர் ஈசான சிவ பண்டிதரும் தமிழ்க் குலத்தவர்தான். ஆகவே, ’பிராமணர்களின் சதி ஆலோசனைகளைக் கேட்டு சாதிக் கொடுமைகள் செய்தார் இராசராசர்’ எனும் கதைகளும் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளால் தூக்கி வீசப்படுகின்றன.

- செந்தமிழன் மணியரசன்

திருவள்ளுவருக்கு மணி மண்டபம் அமைத்து தினசரி திருக்குறள் படித்து வழிபாடு செய்யும் கிராமம்!


திருவள்ளுவருக்கு மணி மண்டபம் அமைத்து தினசரி திருக்குறள் படித்து வழிபாடு செய்யும் கிராமம்! 

வில்வாரணி என்னும் சிற்றூர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த சிற்றூரில் திருக்குறள் நெறி பரப்பும் மையம் ஒன்றை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திருக்குறள் சாமிநாதன். இவரது பெரும் முயற்சியாலும் பலரது நன்கொடையாலும் உருவானது தான் திருவள்ளுவருக்கு என ஒரு மணி மண்டபம் . தமிழ்நாட்டில் பல தெய்வங்களுக்கும் தலைவர்களுக்கு பல்லாயிரம் மணிமண்டபங்கள் இருந்தாலும் உலகம் போற்றும் வள்ளுவருக்கு மணிமண்டபங்கள் கோவில்கள் என்பது அரிதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வான் புகழ் அளித்த வள்ளுவருக்கு தமிழர்கள் வெகு குறைவான மணி மண்டபங்களே கட்டி உள்ளனர் என்பதும் வேதனையான செய்தி. 

வில்வராணி கிராமத்தில் சாமிநாதன் அய்யாவின் அவர்கள் கடுமையான போராட்டத்திற்கு பின்பு தான் இந்த மணிமண்டபத்தை கட்டி முடித்தார். காரணம் அரசு இவருக்கு இடம் கொடுக்கவில்லை. பல வழிகளில் போராடி இறுதியில் அவரின் வீட்டிற்கு அருகே உள்ள தொடக்கப் பள்ளியின் முன்பு அவருக்கு இடம் ஒதுக்கியது அரசு . அந்த இடத்தில வள்ளுவரின் சிலையை நிறுவி ஒரு சிறிய மணிமண்டபத்தை கட்டி முடித்தார் சாமிநாதன் . இப்போதும் பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள் அனைவரும் இங்கு வந்து வள்ளுவரை வணங்கிய பின்பி தான் பள்ளிக்கு செல்கின்றனர். தினமும் பள்ளிப் பிள்ளைகளே மணிமண்டபத்தை கூட்டி சுத்தம் செய்கின்றனர். பின்பு அவர்கள் வள்ளுவரின் சிலையின் முன்பு தீபம் ஏற்றி திருக்குறளில் உள்ள ஏதேனும் ஒரு முழு அதிகாரத்தையும் படித்து வழிபாடு செய்கின்றனர். இந்த மணிமண்டபத்தின் வெளியே தினமும் திருக்குறளும் பொருளும் எழுதப்பட்டு வருகிறது . இந்த ஊரில் உள்ள பலரது வீடுகளில் திருக்குறள் எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலும் இங்கு உள்ள குழந்தைகள் திருக்குறளை மனப்பாடமாக சொல்கின்றனர். 1330 திருக்குறளையும் பார்க்காமல் ஒப்பிக்கும் மாணவர்களும் இங்கு உண்டு. 

நாம் இங்கு சென்ற வேளையில் பல மாணவர்கள் நம்மிடம் திருக்குறள் சொல்லி பரிசுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர். இந்த கிராமத்தை திருக்குறள் கிராமம் என்று அழைத்தால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு இந்த கிராம மக்கள் திருக்குறள் மீது பற்றோடு உள்ளனர். இந்த மணி மண்டபத்தை காண்பதற்கு நாம் அங்கு சென்ற போது திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி எவ்வாறு விளக்கப் பட்டுள்ளதோ அவ்வாறே நமக்கு விருந்தும் உபசரிப்பும் நடந்தது. சாமிநாதன் அவர்களின் மனைவி காலமாகிவிட்டார் என்ற செய்தியை நமக்கு சொன்னார்கள் . அவர் உயிரோடு இருக்கும்போது ஒரு சமயம் வள்ளுவரின் சிலை வெட்ட வெளியில் மழையில் நனைந்ததாம் . அப்போது அதை பொறுக்க முடியாமல் குடையை வைத்து மழை நீர் வள்ளுவரின் மேல் படாதவாறு பார்த்துக் கொண்டாராம் சாமிநாதன் அய்யாவின் மனைவி. அந்த அளவிற்கு அவரது குடும்பமும் திருவள்ளுவரின் மீது பற்றுடையவர்கள் . இன்று சாமிநாதன் அய்யாவின் மகன் மற்றும் பேரன் ஆகிய இருவரும் வள்ளுவரின் மணிமண்டபத்தை பராமரித்து வருகிறார்கள். 

இவர்களை போல் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களுக்கும் ஒருவர் இருந்தால் வள்ளுவரும் வள்ளுவமும் நாடெங்கும் தழைத்து ஓங்கும் . வள்ளுவர் புகழ் வாழ்வாங்கு வாழும் . வாழ்க இவர்களின் தொண்டு.

நன்றி - தமிழர் பண்பாட்டு நடுவம் 










































சங்ககாலத்தில் போருக்கு செல்லும் போது வீரர்கள் சூடிய மலர்கள் !



போர் முறைகளில் தமிழர்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும், சங்ககாலத்தில் போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்களையும் தெரிந்து கொள்வோம்.

௧. வெட்சி பூ (நிறை கவர்தலின் போது சூடும் பூ) அதாவது சங்ககாலத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர்,அப்போது வெட்சி பூவை சூடிசெல்வர். 

 ௨. கரந்தை பூ.- அப்படி எதிரி நாட்டவர் வந்து கவர்ந்து செல்ல முயலும் போது அதை தடுக்க வரும் வீரர்கள் அணிந்திருக்கும் பூவின் பெயர். 

௩. வஞ்சி - எதிரி நாட்டு படையை முற்றுகையிடும் போது சூடப்படும் பூ.

௪. காஞ்சி - போர் நடக்கும் போது போரில் கலந்து கொள்ளாதவர்கள் , மற்றும் காயம் அடைந்தவர்களை காப்பவர்கள் அணிவது. 

௫ . உழிஞ்சை பூ-எதிரியின் கோட்டையை தகர்க்கும் போது அணிவது. 

௬. நொச்சி - கோட்டையை தகர்க்க வருபவர்களுடன், போரிடுபவர்கள் அணிவது. 

௭ . தும்பை-போர் மிக உக்கிரமாக நடப்பதை குறிக்கும் மலர்.  

௮. வாகை-வெற்றி பெற்றதை குறிக்கும் மலர். 

௯ . பாடாண்-அரசனின் வெற்றியை போற்றி பாடி பரிசில் பெற புலவர்கள் வரும்போது சூடும் மலர்.

நன்றி : நவீன் மதனகோபால்

உலகம் வியக்க கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் - 18 நவம்பர்





வ .உ. சிதம்பரனார் . நினைவு தினம் இன்று (பிறப்பு)- செப்டம்பர் 5 1872 - (இறப்பு ) நவம்பர் 18 1936 



கப்பலோட்டிய தமிழன். சிறந்த தமிழ் பற்றாளர் . வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர், தமிழ் செய்யுள்கள் இயற்றியுள்ளார், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் உள்ள அனேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு இவர் அளித்த பங்கு அளப்பரியது . எவரும் செய்யத் துணியாத காரியத்தை இவர் செய்து முடித்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து நாமே வணிகம் செய்ய வேண்டி ஒரு கப்பலை வாங்க தீர்மானித்தார். 


ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது.


ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார். அதன் படி கப்பல் வாங்கி பிரிட்டிஷ் கப்பல்களுக்கு மாற்றாக இதனை இயக்கினார் . வணிக ரீதியாக ஆங்கிலேயே கப்பலை தோற்கடித்தார் .  

இவ்வாறு இந்தியத்தை நம்பி அளப்பரிய தொண்டாற்றி ஏமாந்த தமிழர்களுள் இவரும் ஒருவர். இன்று தமிழன் இந்தியத்தால் இழந்தது கொஞ்சம் நஞ்சமில்லை . இன்று அணு உலைப் போராளி உதயகுமாரின் மேல் இந்தியநாடு தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது . அதே வழக்கு தான் சிதம்பரனார் மீதும் ஆங்கிலேய அரசு பதிவு செய்து அவரை இரட்டை ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தியது . சிறையில் வைத்து அவரை செக்கு இழுக்க வைத்தது. இன்று இந்தியாவிற்கு எதிராக செயல் பட்டதாக அணு உலை போராளிகள் பலர் மீதும் நாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டாக வழக்கு பதிவு செய்யப் பட்டு வருகிறது . ஆங்கிலேயே ஆட்சியில் நடந்த கொடுமை 

இன்று தமிழ் மக்களின் மேல் இந்திய நாடு நடத்துகிறது , இதற்கா சிதம்பரனார் போன்ற நல்லவர்கள் உழைத்தார்கள் என்று நினைக்கும் பொது நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது . ஆங்கிலேயனை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரத்தை இன்று இந்தியர்களிடம் பறிகொடுத்து விட்டனர் தமிழர்கள். தமிழர்களின் ஒவ்வொரு உரிமைகளும் நாளுக்கு நாள் பறிபோய் கொண்டிருக்கிறது . இப்போது நமக்கு மீண்டும் ஒரு சிதம்பரனார் தேவை . அப்போது தான் தமிழனும் தமிழும் தலை நிமிர்த்து இந்நாட்டில் வாழ முடியும் . வாழ்க கப்பலோட்டிய தமிழனின் புகழ்.






இல்லங்களில் எவ்வாறு தமிழை மீட்டெடுப்பது ? (காணொளி )


தமிழர் பண்பாட்டு நடுவம் பயிற்சி முகாம். நாம் அன்றாடம் வாழ்வியலில் தமிழை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் தோழர் அதியமான் விளக்குகிறார். நம் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வியில் படித்தாலும், இல்லங்களில் அவர்களுக்கு தமிழில் பயிற்றுவிப்பது அவசியமாகும். அதை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பது குறித்த விளக்கம் அளிக்கிறார் தோழர் அதியமான்.








தீபாவளி தமிழர் திருநாள் அல்ல. எதிரியின் சாவை கொண்டாடும் மரபு தமிழர்களுக்கு இல்லை!


தீபாவளி பழந்தமிழ் இலக்கியத்தில் இல்லை...

தமிழறிஞர் அ.கி. பரந்தாமனார் தனது "நாயக்கர் வரலாறு" நூலில் குறிப்பிட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் தீபாவளிக்கும் நரகாசுரன் கதைக்கும் தொடர்பே இல்லை. வடநாட்டார் விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீப=விளக்கு. ஆவலி=வரிசை . தீப+ஆவலி= தீபாவலி. இந்த சொற்றொடர் பின் 'தீபாவளி' என்று திரிந்தது. இன்றும் வடநாட்டு மார்வாரி, குசராத்திகள் இந்நாளில் புதுக்கணக்கு தொடங்குவதோடு அந்நாளில் விளக்கேற்றி கொண்டாடுவர். தமிழகத்தில் 16ஆம் நூற்றாண்டில் மதுரை, செஞ்சி நாயக்கர்களால் புகுத்தப்பட்ட ஒன்றே தீபாவளி" என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்தவன் இறப்பில் மகிழ்ச்சி கொள்ளும் பண்பாடு தமிழர் பண்பாடாக இருக்க முடியாது. வாடிய பயிருக்கும், குளிரால் நடுங்கிய மயிலுக்கும், தசையொடிந்த பறவைக்கும் இரக்கம் காட்டி வளர்ந்த பண்பட்ட தமிழரினம் எதிரியின் சாவைக்கூட கொண்டாடியதாக எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை. தமிழரின் மூலவரலாறு அறியாத காரணத்தால் இற்றைய தமிழரினம் தம் இனத்தைச் சேர்ந்த 'நரகாசுரன்' கொன்றழித்த நாளை மகிழ்ச்சியாக்கி கொண்டாடுகிறது. இது அருவெருக்கத்தக்கது. தமிழர்களின் வேர்களை அறிந்திடுவோம்! ஆரியக்கதைக்கு அடிபணியாதிருப்போம்!

- நன்றி கதிர் நிலவன்


நரகாசுரனுக்கு வீர வணக்கம் செலுத்தும் தமிழர்கள் 



தமிழறிஞர் பரந்தாமர்

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள். கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன. 

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். 

ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும். 

- கு.கண்ணன் 
பெரியார் திராவிடர்கழகம்


தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம், எதற்காக கொண்டாடுகிறோம் , அதில் என்ன வரலாற்று உண்மை இருக்கிறது என்பதை தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை. யாரோ ஒரு கதையை சொன்னார்கள், பட்டாசுகள் வெடிக்கச் சொன்னார்கள், அதை நாமும் அப்படியே நம்பி பின்பற்ற வேண்டும் என்ற அடிமை மனநிலை தான் தற்போது தமிழர்களிடம் உள்ளது. இதை கொண்டாடுவதற்கு எந்த அடிப்படைப் காரணங்கள் இல்லாமல் வெறும் வாழ்த்துகள் மட்டும் பரிமாறிக் கொள்கிறார்கள் தமிழர்கள். 

ஆனால் உணர்வுப் பூர்வமாக கொண்டாடப் படவேண்டிய உழவரின் திருநாள் , கதிரவனுக்கு, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாளை எந்த வகையிலும் தமிழர்கள் தீபாவளிக்கு இணையாக பெருமையாக கொண்டாடுவதில்லை. 

இந்த நிலை மாற வேண்டும் என்றால் நம் குழந்தைகளுக்கு உண்மையை சொல்லிக் கொடுப்போம். 
தமிழர்கள் அறிவுள்ளவர்கள் என்று ! 

 நமது பண்பாட்டு பண்டிகை என்பது அறிவிப்பூர்வமாக பொங்கல் திருநாளே என்று ! 

தமிழர் திருநாளை வேறு எந்தப் பண்டிகையை விட சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ! 

அறிவுக்கு பொருந்தாத பண்டிகைகளை புறக்கணிப்போம் என்று !

நன்றி - ராஜ்குமார் பழனிசாமி



தூய தமிழ் பேசுவோமா ? (காணொளி)





தமிழர் பண்பாட்டு  நடுவம் சென்னை கடற்கரையில் நடத்திய தூய தமிழ் போட்டி. இன்றைய மாணவர்களின் தமிழ் அறிவை நீங்களே பாருங்கள் .

ஹீரோ ஹோண்டா விளம்பரத்தில் சாதிக் குறியீடு. தமிழர்கள் கடும் கண்டனம்

ஹீரோ ஹோண்டா  விளம்பரத்தில் சாதிக் குறியீடு.   தமிழர்கள் கடும் கண்டனம் . 

இன்று இந்தியா முழுவதும் ஹீரோ ஹோண்டா  நிறுவனம் நாளிதழ்களில்  ஒரு விளம்பரத்தை கொடுத்திருந்தது . அதில் ஹீரோ இருசக்கிர  வாகனத்தை சாதி பெயர்  வைத்து குறிப்பிட்டு அந்த வாகனமும் குடும்பத்தின் அங்கம் என்று கூறியுள்ளது அந்த நிறுவனம். இந்தியாவின்  மற்ற மாநிலங்களில்  இன்னும் சாதியை பெயருக்கு  பின்னால் போடும் இழி நிலை நிலவி வருவது நாம் அறிந்ததே. ஆனால் தமிழ்நாட்டில் நாம் பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடுவது  நிறுத்தி பல  காலம் ஆகிறது. பெரியாரின் சாதி ஒழிப்பு  பரப்புரைக்கு பின் சாதியை குறிப்பிட வேண்டியது இல்லை எனவும் சாதியை பெயருக்கு  பின்னால் போடுவது இழிநிலை என்ற கருத்தியலையும் தமிழக மக்கள் நன்கு உள்வாங்கி உள்ளனர் . இந்நிலையில் ஹீரோ ஹோண்டா  நிறுவனம்  தன்னுடைய விளம்பரத்தில் அய்யர் என்ற சாதிப் பெயரை குறிப்பிட்டு , அந்த வாகனமும் அய்யர் வாகனம் என்று குறிப்பிட்டுள்ளது தமிழர்கள்  நடுவே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது . சமூக வலைத் தளங்களில் இந்த விளம்பரப்படம்  அதிகமாக பகிரப் பட்டு வருகிறது . தமிழர்கள் பலரும் அந்நிறுவனத்தை  கண்டித்து வருகின்றனர் . 

அந்நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் தமிழர்கள் . சாதித் திணிப்பையும் , இந்தித் திணிப்பையும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என்று அந்நிறுவனத்திற்கு எடுத்துரைத்தனர்  சமூக ஆர்வலர்கள் . இருந்தும் இந்த விளம்பரத்தை இந்நிறுவனம் நீக்குமா என்று தெரியவில்லை ? நீக்கும் வரை தமிழர்கள் போராட்டம் செய்வார்கள் எனத்  தெரிகிறது. அய்யருக்கு ஒரு வாகன விளம்பரம் என்றால் , நாடார், சானார் , பள்ளர், பறையர், கவுண்டர் முதலிய சாதிகளுக்கும்  தனித்தனியே விளம்பரம் செய்வார்களா இந்த நிறுவனம் என்ற கேள்வியை எழுப்பி  உள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.   வாசகர்கள் நீங்களும் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யலாமே ! 




கீழ்க்கண்ட இந்த தொடர்பில் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக நம் கண்டனத்தை பதிவு செய்யலாம்.

REGIONAL OFFICES Hero MotoCorp Ltd. 18/1(Old No. 30/1) PLN Complex, Third Floor, Coronosmith Road, Gopalapuram, Chennai - 600086, India. Tel: +91-44-28350974 , 28350975, 28350976 Fax: +91-44-28350977 Email: chennai@heromotocorp.com


சிறுவர்களுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்திய திருக்குறள் போட்டி (காணொளி)




தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பில் குழந்தைகளுக்கு திருக்குறள் திருவருட்பா சொல்லும் போட்டிகள் வடலூரில் நடத்தினோம் . வள்ளலார் கட்டிய சத்திய ஞான சபையின் முன்னே இந்த நிகழ்வை நடத்தினோம் . சுமார் 25,000 மக்கள் மாதந்தோறும் பூசம் நாளில் இங்கு கூடுகிறார்கள் . இங்கு கூடும் மக்கள் குடும்பமாக வருகிறார்கள் . அதனால் ஏராளமான குழந்தைகள் இங்கு வருகின்றனர் . அக்குழந்தைகளிடம் மொழி அறிவை மேம்படுத்தவும் , திருக்குறள் திருவருட்பா போன்ற காலத்தில் அழியக் கூடாத நூல்களை குழந்தைகள் மறக்கக் கூடாது என்ற அடிப்படையிலும், குழந்தைகள் மொழியின் மேல் பற்று கொள்ளவேண்டும் என்ற நோக்கிலும் சிறுவர்களுக்கான போட்டியை நாம் நடத்தினோம் . நூற்றுக் கணக்கான குழந்தைகள் மிகுந்த ஆர்வமுடன் இப்போட்டியில் கலந்து கொண்டு இனிப்புகளையும் சிறப்பு பரிசுகளையும் பெற்றனர் . பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் இப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்தினர் . இவ்வாறான போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நாம் நடத்த வேண்டும் என நம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர் .முடிவில் 'வாழ்க தமிழ்' என்ற பசை ஒட்டிகளை குழந்கைகள் அனைவருக்கும் கொடுத்தனுப்பினோம் . நாளைய தலைமுறை தமிழ் மேல் பற்று கொண்ட தலைமுறையாக உருவாக வேண்டும் நமது இலட்சியம். வாழ்க தமிழ்

பாடகி சின்மயிக்கு கிடைத்த நீதி தமிழை உயர்த்திய பாவாணருக்கு கிடைக்கவில்லை!


பாடகி சின்மயிக்கு கிடைத்த நீதி தமிழை உயர்த்திய பாவாணருக்கு கிடைக்கவில்லை!

தமிழ் நெஞ்சங்களே ..பாவாணரை காப்பாற்ற நாதி இல்லை ! தமிழ் முனைவர் ஒருவர் புகார் கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் (மனு எண்: E/268872 நாள்: 3-09-2012), தமிழ் பாவாணரைப் பற்றி நாகூசும் சொற்களால் கீழ்த்தரமாக எழுதியதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டது ? சின்மயி விவகாரத்தில் நடந்த நடுநிலையற்ற பாதி நீதி கூட கிடைக்கவில்லை நம் தமிழ் பாவாணருக்கு . 

தமிழன்னை மீதும், மறைந்த தமிழ் அறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழறிஞர்கள் கொடுத்த விண்ணப்பம் (மனு எண்: E/268872 நாள்: 3-09-2012) காவல்துறை ஆணையருக்குச் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

மீனவர்கள் மீன்களைக் கொல்வதால் மீனவர்களை சிங்களவர் கொல்கிறார்கள் என்று சின்மயி எழுதியுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் இட ஒதுக்கீடு தவறு என்றும் தொடர்ந்து கலகத்தைத் தூண்டும் நோக்குடன் எழுதினார். சின்மயி தூண்டியது முழுவதுமாக வெளிவரவில்லை! அவருடைய தவறுகள் நடுநிலையுடன் ஆராயப்படவில்லை . சமூக உணர்வுகளைத் தூண்டிவிட்ட சின்மயி மீதல்லவா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு வந்திருக்க வேண்டும்? ஆனால் சின்மயி திட்டமிட்டுத் தமிழர்களைத் தொடர்ந்து உணர்ச்சிவயப்பட வைத்து தான் விரித்த வலையில் விழச்செய்து பின்னர் அவர்கள் மீதே கொடுத்த புகாரால் பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

தமிழ் முனைவர் இறையரசன் புகார் கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் (மனு எண்: E/268872 நாள்: 3-09-2012), பாவாணரைப் பற்றி நாகூசும் சொற்களால் கீழ்த்தரமாக எழுதியதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டது ? தூசியாவது தட்டினார்களா ? காவல்துறையினர் !

செர்மனியில் உள்ளவர் வா.கொ விசயராகவன். அவருக்குத் தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் , சமற்கிருத எதிர்ப்பு போன்ற காரணிகளால் தமிழர் மீது வெறுப்பு. 25-03-2010 அன்று அதாவது இரண்டரை ஆண்டுகட்குமுன்னர் “பெயர் மாற்றம்" என்ற குழு மடலாடலில் மின்தமிழ் வலைத்தளத்திலே மறைந்த மாபெரும் தமிழறிஞர்களைக் கீழ்த்தரமாக எழுதினார். மீண்டும் 2012- இல் ஆகத்து மாதத்தில் பாவாணரை நா கூசும் சொற்களால் எழுதினர். 

முதுபெரும் தமிழறிஞர்களையும், மொழியையும், இனத்தையும் ஒரு கூட்டம் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த அரசு தமிழ் எதிரிகளுக்கு ஆதரவான அரசு என்று பெயர் வாங்கிக் கொடுக்க பல்லாற்றானும் சதிவலைகள் பின்னப்படுகின்றனவோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகிறது.

இதில் இணைய வலைத் தளங்கள் என்ற போர்வையில் தமிழர்களைச் சீண்டுவதும் உணர்வுகளைத் தூண்டுவதுமாகக் கலகத்தை உருவாக்கி அரசுக்குத் தொல்லைகளைத் தந்திட சில தீய சக்திகள் அறிந்தே செயல்பட்டு வருவது அரசின் பார்வைக்கும் வந்திருக்கும். தமிழ் மரபு அறக்கட்டளை நடத்திவரும் 'மின் தமிழ்’ என்ற வலைத்தளத்தில் மறைந்த தமிழ்ச் சான்றோர்களை இழித்தும் பழித்தும் குழு மடலாடல் என்ற பெயரில் இழி செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இணையத்தளத்தில் முதுபெரும் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரையும், தமிழ் மொழியையும், தமிழர்களையும் பண்பற்ற ஆங்கில சொற்களைப் பயன்படுத்தி தமிழர்களுக்குத் தீரா மனவலியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறார்கள். மின் தமிழ் வலைத்தளப் பக்கத்தில் விஜயராகவன் என்பவர் ஒருமையிலும், மறைந்த மனிதரைப் பற்றி இகழ்தலும் கூடாது என்று அறிந்தே இழிவுபடுத்தியும் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரைப் பற்றி எள்ளி நகையாடி எழுதியுள்ளார்:

 “ஹஹஹ்ஹஹஹ்ஹஹஹஹஹ்ஹஹஹ் ஞானமுத்து தேவநேயனின் உளரல்களை பற்றிப் பேசினால், வழக்கா. இதை நான் மிகவும் ரசிக்கிறேன். லெமூரியர்களே, போடுங்கள் உங்கள் கேஸ்களை, எனக்கு ஜாலிதான். அவருடைய ஜாதி, மதம் , பொருளதாரம், அரசியல் பார்வைகள், பெண் உறவுகள், அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டவரா இல்லையா, அவர் முனிவரா, கயவனா எதுவும் எனக்கு தெரிய வேண்டியதில்லை. அவருடைய மொழி பற்றிய எழுத்துகள்தான் படித்தேன் - அதைப்போல் உளறல்களை எங்கும் பார்த்ததில்லை. அதைத்தான் இங்கு படித்து, பகிர்ந்து கொண்டேன். இதுக்கு எந்த ஜோக்கராவது கேஸ் போடுவேன் என்றால், உலகம் தான் சிரிக்கும். இது தமிழுலகத்தில் அறிவுசார் விவாதங்கள் எவ்வளவு கீழ் மட்டத்தில் இருக்கிறது எனக்காட்டுகிறது. G.Devaneyan is a charlatan. ஞா.தேவநேயன் பூகோளம், சரித்திரம், இந்திய மரபு சொற்கள், மொழியியல் ஒன்றையும் மதிக்காமல் புருடா விட்டு வைத்துள்ளார். சரமாரியாக பொய்களை உதிர்க்கிறார் ஞானமுத்து தேவநேயன். அதற்கு மேல் தன்கால விஞ்ஞானத்தை ஜோக்காக கருதி, அறிவியல் துறையை கிள்ளுக்கீரையாக்கி அதன் மேல் “மொழியியலை” கட்டுபவன். fraudster , quake, charlatan" என்றெல்லாம் விஜயராகவன் எழுதியுள்ளார்.  

இன்றும் தொடர்ந்து தமிழையும், தமிழறிஞர்களையும் தாக்கி எழுதி வருகின்றார். முன்பு இதே போல் மறைமலை அடிகள், இலக்குவனார், பெரியார், அண்ணா முதலியோரை இழிவாக ‘மின்தமிழ்’-ல் எழுதினார். இவ்வாறு தொடர்ந்து தமிழையும், தமிழறிஞர்களையும் இழிவுபடுத்தித் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதைக் கண்டிக்கிறோம். தாங்கள் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுத்து, மின்தமிழ் வலைத்தளத்தை முடக்கவும் இணையத்தளக் குற்றவாளிகளைக் கைது செய்யவும் வேண்டுகிறோம். சின்மயி என்ற சினிமா பாடகி தமிழரை, மீனவரை, இட ஒதுக்கீட்டை கேவலமாக எழுதியது இன்று அரசு உதவியுடன் நிம்மதியாக தமிழர்களுடன் விளையாடி கொண்டிருகின்றனர் . 

எனவே இப்போதாவது உடனே தமிழ்நாடு காவல் துறை இணையக் குற்றப் பிரிவின் வழியே கடும் நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி வேண்டுகிறோம் .சினம்யி பாடகி போன்றவளுக்கு நடுநிலை இல்லாமல் நியாயம் கிடைத்துவிட்டது . தமிழ் மொழியை காப்பாற்றிய தமிழ் பாவாணருக்கு நடுநிலை இல்லாத அநியாயம் கிடைத்திருகிறது ..இது தான் தமிழகத்தில் தமிழ் அறிஞர்களுக்கு கிடைத்திருக்கும் நியாயமா ? இத்தகைய துயர பயணம் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழர்கள் இல்லாத நாடாக மாறுகிற அச்சம் எழுந்துள்ளது. 

இந்த விடயத்தில் புகார் கொடுத்த தமிழ் அறிஞர்கள் , மற்றும் பல தமிழ் அமைப்புகள் பல ' தமிழ் பாவாணரை தமிழ்நாட்டிலே காப்பாற்ற முடியவில்லை என்ற நீளா துயர் கொண்டுள்ளனர் தமிழக தமிழ் அறிஞர்கள் .. இவர்களுக்கு தமிழ்நாட்டில் நீதி கிடைக்குமா?

வாழ்க தமிழகம் ..வாழ்க தமிழர்கள் !!!!


தூய தமிழ் தந்தவர், தனித் தமிழ் இயக்கம் கண்டவர் பரிதிமாற்கலைஞர்


பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் | 2.11.1903|| ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண சாஸ்திரி' எனும் வடமொழிப் பெயர் நீக்கி 'பரிதிமாற்கலைஞர்' என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார். உயர்தனிச்செம்மொழி தமிழென்றும் வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர். 

கல்வெட்டு அறிஞரும், முன்னாள் தொல்லியல் துறை இயக்குனருமான நாகசாமி எனும் ஆரியஅடிவருடி ஆரியராலும், அவர்தம் சமஸ்கிருதத்தாலுமே தமிழ் தழைத்ததென்று கூசாமல் புளுகி வருகிறார். ஆரியகுலத்தில் பிறந்தாலும் தமிழராய் தமிழுக்காய் வாழ்ந்து மடிந்திட்ட பரிதிமாற் கலைஞர் அவர்தம் எழுதிய 'தமிழ்மொழி வரலாறு' நூலில், "ஆரியர்கள் தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர். தமிழருக்கு ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!" என்று குறிப்பிட்டுள்ளார். வடமொழிக்கு வாதாடும் 'நரகல்சாமிகள்' பரிதிமாற் கலைஞரின் கூற்றைப் படித்து இனிமேலாவது திருந்தட்டும்!  

நன்றி : கதிர் நிலவன்

---------------------------------------------------------------------------------------------------
பரிதிமாற் கலைஞர் வாழ்க்கைக் குறிப்பு :

பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் கோவிந்த சிவன் --லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும் ,தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். 

தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்: 

 “என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே."

தமிழைக் காத்த பெருந்தகையை அவரது நினைவு நாளில் போற்றுவோம் . 

தமிழர்கள் மறந்து போன மொழிப் போர் ஈகிகள் மணி மண்டபம். (படங்கள்)


தமிழர்கள் மறந்து போன மொழிப் போர் ஈகிகள் மணி மண்டபம். நினைவு கூர்வோமா ?  (படங்கள்)

மொழிப் போர் ஈகிகளுக்கு என்று ஒரு மண்டபம் தமிழக அரசால் சென்னையில் காந்தி மண்டபம் அருகே கட்டப்பட்டுள்ளது என்று பலருக்கும் தெரியாது  . இந்த மண்டபத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த அனைத்து போராளிகளின் படங்களும் உள்ளது. சிலர் தமிழக காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் . சிலர் சிறையில் இறந்து போயினர் . சிலர் தங்கள் உடலை தீக்கு இரையாக்கினர். இந்திய சுதந்திர போராட்டத்தை விட ஒரு வலிமையான போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம் . இந்த போராட்டம் மட்டும் நடைபெறவில்லை எனில் இன்று தமிழ்நாட்டில் யாரும் தங்கள் தாய் மொழியில்  பேசிக் கொண்டிருக்க  மாட்டார்கள். தற்போது எப்படி ஆங்கிலம் ஐம்பது விழுக்காடு  தமிழில் கலந்து விட்டதோ, அதே போல் இந்தியும் கணிசமாக தமிழில் கலந்து போயிருக்கும் . இல்லங்களில் , தொலைகாட்சிகளில் ஹிந்தி மட்டுமே நடமாடிக் கொண்டிருக்கும். அவ்வாறு நிகழாமல் நம் மொழியையும் இனத்தையும் காத்தவர்கள் இந்த மொழிப் போர் தியாகிகள்.

ஆனால் இப்படிப் பட்ட தியாகத்தை செய்தவர்களை பற்றி எத்தனை தமிழர்களுக்கு தெரியும் , எத்தனை மாணவர்களுக்கு தெரியும் ? இன்று இந்த தியாகிகள் மண்டபத்தில் ஆள் நடமாட்டமே  இல்லை . யாரும் இங்கு வந்து இத்தகைய இனத்திற்காக உயிர் நீத்த வீரர்களை நினைவு கூர்வதில்லை . இந்த மண்டபமும் பராமரிக்கப் படுவதில்லை. இந்த மொழிப் போர் குறித்து எந்த விழிப்புணர்வு பலகைகளும் இந்த மண்டபத்தில் இல்லை. இவர்கள்  எதற்காக உயிர் நீத்தார்கள்,  இந்தி திணிப்பு எவ்வாறு நடந்தது , ஏன் இவர்கள்  போராடினார்கள் என்ற எந்த வரலாறுகளும் எழுதப்படவில்லை . இந்த நிலையில் தான் தற்போது இந்த மண்டபம் உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் எவ்வாறு இன்றைய தலைமுறை மொழிப் போர் தியாகிகளை நினைவு கூர்வர் ? பள்ளி பாடங்களிலும்  இவர்களின் தியாகத்தை பற்றி எந்தக் குறிப்பு இல்லை . வரலாற்றில் மறைக்கப்பட்டது இவர்களுடைய ஒப்பற்ற தியாகங்கள். தமிழக அரசே இதை  மறைத்து  விட்டது . தமிழ் இனத்தின் தன்னிகரில்லா இந்த தியாகிகளை இனியாவது தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்வோம் . உரிய மரியாதை செலுத்துவோம் . வாழ்க தமிழ் . 







































[vuukle-powerbar-top]

Recent Post