விருதுநகர் மாவட்டம ராஜபாளையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று மதுரை புறப்பட்டு சென்றது. பஸ்சை ராஜபாளையத்தை சேர்ந்த சண்முகவேல் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. இன்று காலை 6.15 மணி அளவில் பஸ் திருவில்லிப்புத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் வந்தது.
அப்போது மதுரையில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சுரண்டைக்கு சென்ற வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது. வேன் டிரைவர் கனகராஜ் (30) அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். அதுபோல் பஸ்சின் படிக்கட்டில் நின்ற வேல்ராஜ் (45) என்பவர் கீழே விழுந்தார்.
அவர் மீது பஸ் சக்கரம் ஏறியது. அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். மேலும் பஸ்சில் இருந்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னுபாண்டியன் எம்.எல்.ஏ., வன்னியம்பட்டி இன்ஸ்பெக்டர் சின்னபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்பிரபு, தீயணைப்பு அதிகாரி மாணிக்கம் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் இறந்த வேல்ராஜ் ஜவுளி வியாபாரி. இவரது சொந்த ஊர் தளவாய்புரம் செட்டியார்பட்டி ஆகும். மதுரைக்கு ஜவுளி வாங்கி சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.