தமிழ் நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து மிகவும் செல்வாக்கு குறைந்த கட்சி என்றால் அது பாஜக தான். ஹிந்துத்வா கொள்கையை தங்கள் உயிர் மூச்சாக கருதும் பாஜகவிற்கு பெரியார் பூமியாகிய தமிழகத்தில் என்றுமே செல்வாக்கு இருந்ததில்லை .
இந்நிலையில் தமிழகத்தில் தன் பலத்தை காட்டுவதற்கு பாஜக அதிரடியாக களம் இறங்கி உள்ளது
பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு மதுரை விரகனூர் ரிங்ரோடு பகுதியில் நாளை (10 . 5 . 2012 ) காலை தொடங்குகிறது.
இம்மாநாட்டுக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அகில இந்திய தலைவர் நிதின் கட்டகாரி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். எல்.கே.அத்வானி, சுஷ்மா, சுவராஜ் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மாநாட்டு பந்தல் சுமார் 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு முகப்பில் பாராளுமன்ற கட்டிடம், தமிழக சட்டசபை கட்டிட தோற்றமும் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் பேசும் மேடை தாமரை வடிவில் பிரமாண்ட முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
மாநாட்டுக்கு வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இம்மாநாட்டு நிகழ்ச்சிகளை காண 11 இடங்களில் எல்.இ.டி. திரையில் ஒளி பரப்பப்படுகிறது.
மாநாட்டு பந்தலுக்கு செல்ல நுழைவுக்கட்டணம் ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. மாநாட்டு பந்தலில் மூன்று வேளை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பத்து ரூபாய் நுழைவுக்கட்டணத்தில் உள்ளே செல்பவர்களுக்கு மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படவிருக்கிறது.
இப்படி இலவசமாக ஏதாவது கொடுத்தாவது பொது மக்களை தன்பக்கத்திற்கு இழுக்க முடியுமா என பாஜக பார்க்கிறது. தமிழக மக்கள் இதை விட பெரிய இலவசங்களை பார்த்தவர்கள். இந்த அற்ப இலவசங்களுக்கு மயங்குவார்களா என்ன ?