நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால்தான் நாட்டின் பல்வேறு துறைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் நடைபெற்ற முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்பாவுப் பிள்ளை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசியதாவது:
அப்பாவுப் பிள்ளை ஒசூர் பஞ்சாயத்து தலைவர், யூனியன் தலைவர்,எம்.எல்.ஏ, உள்ளிட்ட பல்வேறு பதவியை வகித்துள்ளார். இந்த பகுதியின் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்காக பாடுபட்டவர்.
ஓசூர் வழியாக ஜோலார்பேட்டைக்கு ரயில் வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த மனுவை ரயில்வே அமைச்சரிடம் பரிந்துரைத்து இத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் காங்கிரஸ் கட்சிதான் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. 1951 ம் ஆண்டில் 17 விழுக்காடாக இருந்த கல்வியறிவு, 2011 ம் ஆண்டு 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மேலும் தொழில்துறை, மருத்துவத் துறை, தொலைத் தொடர்புத் துறை என அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், கர்நாடக மாநில முன்னாள் டி.ஜி.பி. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்