Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம்

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகி விட்டார். இது அவருக்கு 6வது கல்யாணம்.

போன வாரம்தான் தனது 70வது பிறந்த நாளை தனது மனைவிகள் புடை சூழ கொண்டாடினார் ஜூமா. அவருக்கு ஏற்கனவே நடந்துள்ள 5 கல்யாணங்கள் மூலம் 21 குழந்தைகள் உள்ளன.

தற்போது 6வது முறையாக கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் ஜூமா. அவரது மனைவியாகப் போகிறவர் போங்கி நெகமா. இருவரும் ஏற்கனவே சேர்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமாக போங்கியை மணக்கப் போகிறார் ஜூமா.

தென் ஆப்பிரிக்காவின் ஜூலு கலாச்சாரப்படி ஒருவர் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அந்த பாரம்பரியப்படிதான் அடுத்தடுத்து கல்யாணம் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார் ஜூமா.

அடுத்த வாரம் நிகந்தலா என்ற இடத்தில் போங்கிக்கும், ஜூ்மாவுக்கும் பாரம்பரிய முறைப்படி கல்யாணம் நடைபெறவுள்ளது. போங்கியின் முழுப் பெயர் குளோரியா போங்கி நெகமா என்பதாகும்.

இந்தக் கல்யாணம் குறித்து ஜூமாவின் செய்தித் தொடர்பாளர் மேக் மகராஜ் கூறுகையில், போங்கி நெகமாவுடனான தனது உறவை அதிகாரப்பூர்வமாக்க அதிபர் முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் தனிப்பட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் திருமணத்தில் போங்கியை மணக்கிறார் அதிபர் என்றார்.

போங்கி மூலம் ஜூமாவுக்கு 3 வயதில் மகன் உள்ளான். கடந்த வருடம் ஜூமா பிரான்ஸுக்குப் போனபோது அவருடன் மனைவியாக இணைந்து சென்றவர் போங்கிதான்.

டர்பனைச் சேர்ந்தவர் போங்கி. பிசினஸ் பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றைப் படித்துள்ளார். இவருடன் தனது திருமணத் தொடர் கதையை நிறுத்தத் திட்டமிட்டுள்ளாராம் ஜூமா. மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ளும் திட்டம் அவரிடம் இல்லையாம். போங்கியோடு போதும் என்று கூறியுள்ளாராம்.

அதிபர் பதவிக்காலத்தில் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்துள்ள ஜூமா, தற்போது 3வது முறையாக கல்யாணக் கோலம் தரிக்கிறார்.

இவரது முதல் மனைவி பெயர் சிசகாலே குமாலோ. 1959ம் ஆண்டு பார்த்து கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நொம்புமெலலோ மந்துலி ஜூமா, தொபேகா ஸ்டேசி மபிஜி ஆகியோரை மணந்தார்.

உள்துறை அமைச்சராக இருந்த நாகசோனா டிலாமினியை 1998ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அவரது இன்னொரு மனைவியான காதே ஜூமா 2000மாவது ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜூமாவின் தந்தைக்கு 2 மனைவிகள். அதில் 2வது மனைவிக்குப் பிறந்தவர்தான் ஜூமா.

ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனியாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார் ஜூமா என்கிறார்கள். புதிதாக மணக்கப் போகும் நெகமாவுக்குத்தான் தனியாக வீடு இல்லையாம். புதிதாக கட்டி வருகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் அதிபர் மாளிகையில் ஆறு பேருக்கும் தனித் தனி படுக்கை அறை உள்ளதாம். அந்த ஆறு அறைகளுக்கும் போக சுரங்கப் பாதைகளைத்தான் ஜூமா பயன்படுத்துகிறார் என்றும் கூறுகிறார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post